Thursday 9 February 2012

தென்னையை அதிக மகசூல்



அதிக மகசூல் தரும் நுண்ணூட்டக் கலவை: வேளாண் துறை யோசனை

நுண்ணூட்டச் சத்து அளிப்பதன் மூலம் தென்னையை அதிக மகசூல் பெறும் பயிராக மாற்ற முடியும் என்று
தென்னையில் நல்ல வளர்ச்சி மற்றும் அதிக மகசூல் என்பது மண்வளத்தை பொருத்தே அமைகிறது. நீண்டகால பயிரான தென்னை பல ஆண்டுகளுக்கு நல்ல பலன் தரக்கூடியது. இதனால் இதற்கு தொடர்ந்து நுண்ணூட்டச் சத்து தேவை. பொதுவாக விவசாயிகள், தழை, மணி, சாம்பல் சத்துகளையே பயிருக்கு அளிக்கின்றனர்.
நுண்ணூட்டச் சத்துக்களான துத்தநாகம், காப்பர், இரும்பு, மாங்கனீசம், போரான் போன்ற சத்துகளை நமது விவசாயிகள் மண்ணில் இடுவதில்லை. இதனால் நுண்ணூட்ட சத்துக்களின் பற்றாக்குறை ஏற்பட்டு தென்னையின் வளர்ச்சி வெகுவாக பாதிக்கப்படுகிறது. இதனால் மகசூல் பாதிப்பை தென்னை சந்திக்கிறது. தென்னை நன்றாக வளர்ச்சி பெற்று, தொடர்ந்து மகசூல் தருவதற்கு நுண்ணூட்டச் சத்துகளை விவசாயிகள் அளிப்பது அவசியம்.
6 மாதத்திற்கு ஒரு முறை 300 முதல் 500 கிராம் வரை ஒரு மாத காலத்திற்கு நுண்ணூட்டக் கலவை இடுவது நல்லது.
மரத்தில் இருந்து 3 அடி தள்ளி 12 அடி ஆழத்தில் சுற்றிலும் நுண்ணூட்டக் கலவை இட வேண்டும். 5 வயதிற்குட்பட்ட தென்னை மரங்களுக்கு இதில் பாதி அளவு இட்டாலே போதும்.
நுண்ணூட்டச் சத்துகளை சூப்பர் பாஸ்பேட் உரத்துடன் கலந்து இடக்கூடாது. இது மிகவும் முக்கியம்.நுண்ணூட்ட கலவை தென்னை வளர்ச்சியை துரிதப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மண்ணில் உள்ள மற்ற சத்துகளை எளிதில் வேருக்கு எடுத்துச் செல்ல உதவுகிறது.
நுண்ணூட்ட பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதினால் மரம் சீரான வளர்ச்சி அடைவதுடன், அதிக மகசூல் மற்றும் எண்ணெய் சத்து கிடைக்க வழிவகை செய்கிறது.
இரும்பு மற்றும் போரான் ஆகியன குரும்பை உதிர்வது மற்றும் ஒல்லிகாய்கள் காய்ப்பதைத் தடுக்கின்றன. நுண்ணூட்டச் சத்துக் காரணமாக செழிப்பாக வளரும்
தென்னை மரங்களில் இரியோபிட் சிலந்தி தாக்குதல் குறைகிறது.
மேலும் விவரம் பெற விரும்புவோர் அந்தந்தப் பகுதிகளில் உள்ள வேளாண்மை துறை அலுவலர்களை அணுகலாம்.

தென்னையில் கருந்தலைப் புழுவை கட்டுப்படுத்த வேண்டுமா?

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிசானப்பள்ளி, கொல்லப்பள்ளி, தொரப்பள்ளி, ஒன்னல்வாடி, காரப்பள்ளி, வேப்பன்ப்பள்ளி, ஊத்தங்கரை, வேலூர் மாவட்டத்தில் ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் தென்னை மரங்களில் கருந்தலைப் பழுக்களின் தாக்குதல் தென்படுகிறது.
தாக்குதலின் அறிகுறிகள்:
புழுத் தாக்கப்பட்ட தென்னை மட்டைகளின் அடிபாகத்தில் அறிக்கப்பட்டு சக்கைகளிலான நீளமான கூண்டுகள் காணப்படும். இதில் புழுக்கள் தென்படும். இவை மட்டைகளில் உள்ள பச்சையத்தை சுரண்டி சாப்பிடும். இதனால் மட்டைகள் காய்ந்து விடும்.
தடுக்கும் முறை:
கருந்தலை புழுவினால் பாதிக்கப்பட்ட ஒலைகள் மற்றும் மட்டைகளை தனியாக எடுத்து எரித்துவிட வேண்டும்.
இளம் மரங்களில், மைகுளோராபாஸ் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மி.லி. வீதம் கலந்து தாக்குதல் அதிகம் உள்ள மரங்களின் அடிபாகத்தில் தெளிக்க வேண்டும்.
காய்ப்பு வந்த மரங்களில், மரத்தின் அடிபாகத்தில் இருந்து 1.5 மீட்டர் உயரத்தில் மரத்தில் சாய்வாக துளையிட்டு அதனுள் மோனாகுரோடம்பாஸ் மருந்தை 5 மி.லி. ஊற்றி தாமிர கரைசல் கலந்த களி மண்ணால் மூடிவிட வேண்டும்.
வேர்மூலம் கட்டுப்படுத்தவதாக இருந்தால், வளர்ந்த வேரை சாய்வாக வெட்டி அதில் மோனோகுரோடபாஸ் கலவையை பாலிதீன் பை மூலம் கட்டி விட வேண்டும்.
தினமணி தகவல்
ராஜன், வேளாண்மை இணை இயக்குநர்,
டாக்டர் சுந்தரராஜன், ரமேஷ்பாபு வேளாண் விஞ்ஞானிகள்
நாகராஜன், வேளாண் உதவி இயக்குநர்
ஓசூர்

தேங்காய் அறுவடைக்கு ஏற்ற தருணம்

இந்திய அளவில் தேங்காய் பயிரிடுவதில் தமிழ்நாடு சற்று குறைவாக உள்ள போதிலும் அதிக உற்பத்தித் திறன் காரணமாக இந்திய அளவில் தேங்காய் உற்பத்தியில் 34 சதவீதத்தை தமிழ்நாடு கொண்டுள்ளது.
  • இதில் கோவை, தஞ்சை, திண்டுக்கல், கன்னியாகுமரி, வேலூர், ஈரோடு, தேனி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் 80 சதவீதம் பங்கினை அளிக்கின்றன. வரும் மாதங்களில் தேங்காய் அறுவடை செய்தால் நல்ல விலை கிடைக்குமா, இல்லையா என தென்னை விவசாயிகள் சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்.
  • மொத்த உற்பத்தியில் 35 சதவீதம் மட்டுமே எண்ணெய் உபயோகத்துக்கு பயன்பட்டாலும் தேங்காய் சார்ந்த பொருளாதார நடவடிக்கைகளை தேங்காய் எண்ணெயின் விலையைப் பொருத்தே உள்ளன. கடந்த ஆண்டில் உணவு எண்ணெய் சுமார் 80 லட்சம் டன்னுக்கு அதிகமாக இறக்குமதி செய்யப்பட்டதால், இந்திய அளவில் எண்ணெய் விலை தேக்கநிலை அல்லது குறைந்தபடி உள்ளது.
  • எண்ணெய் பிழிவோர் சங்கத்தின் ஆய்வின்படி 6.6 லட்சம் கொப்பரையும், 4.3 லட்சம் டன் தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்யும் என்றும் கணக்கீடு செய்துள்ளது. கடந்த ஆண்டைவிட 1.5 சதவீத அளவு இது அதிகமாக இருக்கும்.
  • தேங்காய் ஓட்டின் நிறம், எடை, அளவு மற்றும் அதைத் தட்டும்போது வரும் ஒலி இவற்றைக் கொண்டு தரம் நிர்ணயிக்கப்பட்டு விலை நிர்ணயிக்கப்படுகிறது. தரம் மற்றும் எண்ணெய் பிழிதிறன் அதிகமாக உள்ளதால் பொள்ளாச்சி பகுதிகளில் விளையும் தேங்காய் அதிக விலை பெறுகிறது. தேங்காயிலிருந்து 17 சதவீத அளவு கொப்பரையும், கொப்பரையிலிருந்து எண்ணெய் 60 – 65 சதவீதம் கிடைக்கிறது.
  • பிப்ரவரி முதல் ஜூன் வரை தேங்காய் வரத்து அதிகமாகவும், ஜூலை முதல் டிசம்பர் வரை வரத்து குறைவாகவும் இருக்கும். உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையத்தின் ஆய்வு முடிவுகளின்படி தேங்காயின் விலை ஜூலை மாதத்துக்கு பிறகு அதிகரிக்கத் தொடங்கும். எனவே இந்த காலகட்டத்தில் தேங்காய் அறுவடை செய்தால் அதன் விலை நிலவரம் எப்படி இருக்கும்.
  • இனி வர உள்ள பண்டிகை காலத் தேவைகளுக்கு பிகார், உத்தரப்பிரதேசம், ஆந்திரம், கேரளம் போன்ற மாநிலங்களிலுள்ள வர்த்தகர்கள் அதிக அளவு கொள்முதல் செய்வார்கள். பொள்ளாச்சிப் பகுதியில் தேங்காயின் பண்ணை விலை ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் ரூ.5 முதல் ரூ.5.50 ஆகவும், அக்டோபர், நவம்பர் மாதங்களில் ரூ.5.50 முதல் ரூ.6 வரையும் இருக்கும் என ஆய்வு முடிகள் தெரிவிக்கின்றன.
  • தமிழகத்தின் இதர சந்தைகளில் விலை சற்றுக் குறைவாகவே இருக்கும். விவசாயிகள் மேற்கூறிய விலை முன்னறிவிப்பினைக் கருத்தில் கொண்டு தங்கள் அறுவடையைத் திட்டமிடலாம் என்றார்.

புதிய தென்னை ஏ.எல்.ஆர்.2 (த.வே.ப.க.)

வயது-80 வருடங்கள்.
மகசூல்: சராசரி மகசூல் வருடத்திற்கு மரம் ஒன்றுக்கு 109 காய்கள்.
ஆண்டுக்கு ஒரு எக்டருக்கு 18,988 காய்கள்.
கிழக்கு கடற்கரை நெட்டை, வேப்பங்குளம் 3 ரகங்களைக் காட்டிலும் முறையே 12 மற்றும் 99 சதம் கூடுதல் மகசூல்.
உருவாக்கம்: டிப்தூர் நெட்டையிலிருந்து தேர்வு செய்யப்பட்டது.
பருவம்: ஆடி மற்றும் தைப்பட்டம்.
அதிகபட்ச மகசூல்: வருடத்திற்கு மரம் ஒன்றிற்கு 140 காய்கள்.
சிறப்பியல்புகள்:
  • ஐந்து-ஐந்தரை வருடங்களில் காய்க்கும் திறன்;
  • சீராக மகசூல் கொடுக்கும் திறன்;
  • ஒரு வருடத்திற்கு சராசரியாக 12 பாளைகள்;
  • காய்க்கு 135 கிராம் கொப்பரை;
  • எக்டருக்கு 2.57 டன் கொப்பரை;
  • ஒரு டன் கொப்பரைக்கு தேவை 7000 காய்கள்.
  • எண்ணெய்ச்சத்து 64.7 சதம்.
  • வறட்சியை நன்றாக தாங்கி வளரக் கூடியது.
  • காண்டாமிருக வண்டு, சிவப்புக் கூன்வண்டு, இலைக்கருகல் நோய்க்கு மித எதிர்ப்புத்திறன் கொண்டது.
பயிரிட உகந்த மாவட்டங்கள்: தமிழகத்திலுள்ள தென்னை வளரும் அனைத்து மாவட்டங்கள், குறிப்பாக வறட்சிக்கு இலக்காகும் பகுதிகளுக்கு ஏற்றது.
மேலும் விபரங்களுக்கு, விதை, நாற்றுகள் ஆகியவற்றிற்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
இயக்குனர், ஆராய்ச்சி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 003.

குருத்து அழுகல் நோயிலிருந்து தென்னையைக் காக்க…

தென்னையில் இளம் பருவத்தில் குருத்துப் பகுதியைத் தாக்கி குருத்து அழுகலை ஏற்படுத்தும் இந்நோய் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாகக் காணப்படுகிறது. வடிகால் வசதியற்ற நீர் தேங்கும் தன்மையுள்ள நிலங்களிலும், காற்றின் ஈரத் தன்மை அதிகமாக காணப்படும் பருவ மழைக் காலங்களிலும் இந்நோயின் தாக்குதல் பரவலாக காணப்படும்.
இந்நோய் ஃபைட்டோப்தோரா பால்மிவோரா என்ற பூசணத்தால் ஏற்படுகிறது. இது மண்ணில் வாழும் தன்மை கொண்டது. பாதிக்கப்பட்ட மரத்தில் இருந்து நீரின் மூலம் சுற்றி உள்ள ஆரோக்கியமான மரங்களுக்கும் இது பரவி குருத்து அழுகலை ஏற்படுத்தும்.
இந்நோய் தாக்கப்பட்ட கன்றுகளின் குருத்து இலை வறண்டு காணப்படும். நோயின் தாக்குதல் தீவிரமாகும் போது குருத்து முழுவதும் அழுகி அனைத்து இலைகளும் வறண்டு மரம் பட்டுவிடும்.
பாதிக்கப்பட்ட குருத்து இலைகளை இழுத்தால் கையோடு வந்து விடும். அதன் அடிப்பாகம் அழுகி நுர்நாற்றம் வீசும். இந்நோய் முதலில் இலைகளின் வெளிப்புறத்தை தாக்கி, பின்னர் குருத்து இலையை நோக்கி பரவும். அந்த நேரத்தில் தடுப்பு முறைகளை செய்தால் தென்னையை இந்நோயிலிருந்து காப்பாற்றலாம்.
தடுப்பு முறைகள்:
வரும்முன் காக்கும் வழிமுறையாக தோப்புகளில் வடிகால் வசதியை மேம்படுத்தி அதிகப்படியான நீர் தேங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட மரங்களை தனிமைப்படுத்தி அதற்கு தனியாக நீர் பாய்ச்ச வேண்டும். பரிந்துரை செய்யப்படும் உரங்களுடன் ஒரு மரத்திற்கு 5 கிலோ வீதம் வேப்பம் புண்ணாக்கு இட வேண்டும்.
குருத்து அழுகல் நோயால் பாதிக்கப்பட்டு பட்டுபோன மரங்களை வேர்ப் பகுதியுடன் வயலில் இருந்து அகற்றி எரிக்க வேண்டும். அவ்வாறு தோண்டிய குழிகளில் சருகுகளை வைத்து தீயிட்டு கொளுத்த வேண்டும். இவ்வாறு செய்வதால் மற்ற மரங்களுக்கு இந்நோய் உண்டாகும் பூசணம் பரவுவது தடுக்கப்படும்.
மட்டையின் வெளிப்பகுதியில் அழுகல் ஆரம்பித்தவுடன் அந்த அழுகிய பகுதியை வெட்டி அகற்றி விட்டு, வெட்டப்பட்ட பகுதியில் காப்பர் ஆக்ஸிகுளோரைடு பசையை தடவ வேண்டும்.
மரம் முழுவதும் நன்றாக படும்படி காப்பர் ஆக்ஸிகுளோரைடு 0.2 சதவிகிதத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் அல்லது குளோரோ தலானில் 0.1 சதவிகிதம் ஒரு லிட்டர் தண்ணீரில் பூசணக் கொல்லியை கலந்து தெளிக்க வேண்டும்.
இவ்வாறு செய்தால் குருத்து அழுகல் நோயிலிருந்து தென்னையை காப்பாற்றலாம்