Thursday 9 February 2012

குருத்து அழுகல் நோயிலிருந்து தென்னையைக் காக்க…

தென்னையில் இளம் பருவத்தில் குருத்துப் பகுதியைத் தாக்கி குருத்து அழுகலை ஏற்படுத்தும் இந்நோய் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாகக் காணப்படுகிறது. வடிகால் வசதியற்ற நீர் தேங்கும் தன்மையுள்ள நிலங்களிலும், காற்றின் ஈரத் தன்மை அதிகமாக காணப்படும் பருவ மழைக் காலங்களிலும் இந்நோயின் தாக்குதல் பரவலாக காணப்படும்.
இந்நோய் ஃபைட்டோப்தோரா பால்மிவோரா என்ற பூசணத்தால் ஏற்படுகிறது. இது மண்ணில் வாழும் தன்மை கொண்டது. பாதிக்கப்பட்ட மரத்தில் இருந்து நீரின் மூலம் சுற்றி உள்ள ஆரோக்கியமான மரங்களுக்கும் இது பரவி குருத்து அழுகலை ஏற்படுத்தும்.
இந்நோய் தாக்கப்பட்ட கன்றுகளின் குருத்து இலை வறண்டு காணப்படும். நோயின் தாக்குதல் தீவிரமாகும் போது குருத்து முழுவதும் அழுகி அனைத்து இலைகளும் வறண்டு மரம் பட்டுவிடும்.
பாதிக்கப்பட்ட குருத்து இலைகளை இழுத்தால் கையோடு வந்து விடும். அதன் அடிப்பாகம் அழுகி நுர்நாற்றம் வீசும். இந்நோய் முதலில் இலைகளின் வெளிப்புறத்தை தாக்கி, பின்னர் குருத்து இலையை நோக்கி பரவும். அந்த நேரத்தில் தடுப்பு முறைகளை செய்தால் தென்னையை இந்நோயிலிருந்து காப்பாற்றலாம்.
தடுப்பு முறைகள்:
வரும்முன் காக்கும் வழிமுறையாக தோப்புகளில் வடிகால் வசதியை மேம்படுத்தி அதிகப்படியான நீர் தேங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட மரங்களை தனிமைப்படுத்தி அதற்கு தனியாக நீர் பாய்ச்ச வேண்டும். பரிந்துரை செய்யப்படும் உரங்களுடன் ஒரு மரத்திற்கு 5 கிலோ வீதம் வேப்பம் புண்ணாக்கு இட வேண்டும்.
குருத்து அழுகல் நோயால் பாதிக்கப்பட்டு பட்டுபோன மரங்களை வேர்ப் பகுதியுடன் வயலில் இருந்து அகற்றி எரிக்க வேண்டும். அவ்வாறு தோண்டிய குழிகளில் சருகுகளை வைத்து தீயிட்டு கொளுத்த வேண்டும். இவ்வாறு செய்வதால் மற்ற மரங்களுக்கு இந்நோய் உண்டாகும் பூசணம் பரவுவது தடுக்கப்படும்.
மட்டையின் வெளிப்பகுதியில் அழுகல் ஆரம்பித்தவுடன் அந்த அழுகிய பகுதியை வெட்டி அகற்றி விட்டு, வெட்டப்பட்ட பகுதியில் காப்பர் ஆக்ஸிகுளோரைடு பசையை தடவ வேண்டும்.
மரம் முழுவதும் நன்றாக படும்படி காப்பர் ஆக்ஸிகுளோரைடு 0.2 சதவிகிதத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் அல்லது குளோரோ தலானில் 0.1 சதவிகிதம் ஒரு லிட்டர் தண்ணீரில் பூசணக் கொல்லியை கலந்து தெளிக்க வேண்டும்.
இவ்வாறு செய்தால் குருத்து அழுகல் நோயிலிருந்து தென்னையை காப்பாற்றலாம்

No comments:

Post a Comment